×

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இது சென்னைக்குள் மட்டும் பொருந்துமா அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா என்று விளக்கப்படவில்லை. கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும். பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும். வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி அமர்வு, இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

* மருத்துவர்களுக்கு அனுமதி மறுப்பு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி மறுத்த அறிவிப்பிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.னிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவில், மருத்துவர்கள் எந்தவிதமான விதி மீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.கலைமதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் ஸ்டிக்கர் பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்க வேண்டுமென்று கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22க்கு தள்ளிவைத்தார்.

The post வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,High Court ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர்...